உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
மடத்துக்குளம் தாலுகா நரசிங்காபுரம் பகுதியிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி வீணாவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மைதானம்
மடத்துக்குளம் தாலுகா நரசிங்காபுரம், விவேகானந்தர் நகர் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதில் இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்தும் பலவிதமான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.இதை அந்த பகுதியிலுள்ளவர்கள் பயன்படுத்திவந்தனர்.
பல ஆண்டுகளாக இந்த மைதானம் பராமரிக்கப்படாததால் புதர் வளர்ந்தும்,விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும்,உடைந்தும் சாய்ந்தும் உள்ளன.இதனால் தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.
பராமரிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாகவும், ஆரோக்கியத்திற்காகவும் விளையாட்டு உபகரணங்கள் பல ஆண்டுக்கு முன்பு அரசால் பொருத்தப்பட்டன. அதற்குப்பின் வந்த ஆண்டுகளில் செல்போன், கணினி உள்ளிட்டவற்றில் ஆன்லைன் விளையாட்டுகள் அதிகளவு உருவாக்கப்பட்டன.
இந்த விளையாட்டுகளில் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் திறந்தவெளி விளையாட்டு மற்றும் மைதான விளையாட்டுக்களை மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. நீண்டநாட்கள் இது போல் இருந்ததால் பழுதடைந்து, துருப்பிடித்து சாய்ந்து விட்டன. வீணாகும் இந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதானத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.