வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் முகவர்களை நியமிக்க படிவங்கள் வினியோகம்
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மொத்தம் 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் தங்களின் முகவர்களை நியமிக்க படிவம் 24-ஐ சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் தனது வார்டுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மேசைக்கு ஒருவர் எனவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மேசைக்கு ஒருவர் எனவும் முகவர்களை நியமிக்க படிவங்களை அந்ததந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.