ஹிஜாப் அணிந்தால் பெண்கள் கற்பழிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்; ஜமீர் அகமது கான் எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

ஹிஜாப் அணிந்தால் பெண்கள் கற்பழிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று ஜமீர் அகமது கான் எம்.எல்.ஏ. கூறினார். அவரது கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-14 21:27 GMT
உப்பள்ளி: ஹிஜாப் அணிந்தால் பெண்கள் கற்பழிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று ஜமீர் அகமது கான் எம்.எல்.ஏ. கூறினார். அவரது கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் பலாத்காரம் அதிகரிப்பு

கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜமீர் அகமது கான் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் எங்கு பார்த்தாலும், கற்பழிப்பு மற்றும் பாலியல் சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. கற்பழிப்பு, பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே முஸ்லிம் மாணவிகள், பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர். அவர்கள் தங்கள் அழகை மறைத்து பாலியல் தொல்லைகள் நடைபெறாதவாறு காத்து கொள்கின்றனர். 
இவ்வாறு அவர் கூறினார். 

ஜமீர் அகமது கானின் கருத்திற்கு ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மன்னிப்பு கேட்கவேண்டும்

இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. கற்பழிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளவே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான கூறியுள்ளார். அவரது இந்த கருத்து இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரையும் இழிவு படுத்துவதுபோன்று அமைந்துள்ளது. 

பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில், இப்படி மோசமான கருத்துகளை பதிவிடலாமா?. உடனே அவர் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர், ஜமீர் அகமது கான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது:-

டி.கே.சிவக்குமார் கண்டனம்

ஹிஜாப் விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டில் உள்ளது. அதனால் யாரும் இதுபற்றி கருத்து கூறக்கூடாது என்று காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஜமீர் அகமதுகான் பேசிய கருத்து குறித்து அவர் மன்னிப்பு கோரவேண்டும்.  ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து கூறியதற்கு ஜமீர் அகமது கான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கு ஜமீர் அகமதுகான் நேற்று பதில் அளிக்கையில், ஹிஜாப் அணியாவிட்டால் கற்பழிப்பு நடக்கும் என்று கூறவில்லை. ஹிஜாப் அணிந்தால் பாலியல் தொல்லைகள் குறையும் என்று கூறினேன். ஹெல்மெட் எப்படி உயிரை காக்குமோ, அதேபோன்று ஹிஜாப் முஸ்லிம் மாணவிகளின் பாதுகாப்பு கவசம். இதை வேண்டுமென்றே சிலர் திரித்து கூறி வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்