“தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப்பாருங்கள்”- எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
“தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப்பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சாவல் விடுத்தார்.
நெல்லை:
“தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப்பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சாவல் விடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லை சட்டமன்ற தொகுதி மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாந்ததைப் போன்று மீண்டும் ஏமாறமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மக்களின் தற்போதைய எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் பரப்புரை தேவையில்லை. தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி உள்ளது.
சிம்ம சொப்பனமாக உள்ளது
தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் இவ்வாறு பேசுகிறார். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப்பாருங்கள். அவ்வாறு முடக்கப்பட்டால் தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர்களில் முதல் இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
ஆட்சி அமைத்து 9 மாதம் ஆகும் நிலையில், 3 மாதங்கள் வரை கொரோனாவோடு போராடி உள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி கஜானாவை காலி செய்து விட்ட நிலையிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டியவர் மு.க.ஸ்டாலின்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
நெல்லையில் பல்வேறு திட்டங்களை கடந்த அ.தி.மு.க. ஆட்சி கிடப்பில் போட்டு விட்டது. அவற்றை நிறைவேற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வள்ளியூர்
முன்னதாக வள்ளியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரி விரைவில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.252 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.
மக்கள் நலத்திட்டங்கள் தொடரவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்
இந்த பிரசாரங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர்கள் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் வடக்கு கிரகாம்பெல், ராதாபுரம் மேற்கு ஜோசப் பெல்சி, களக்காடு ராஜன், செல்வகருணாநிதி, நாங்குனேரி ஆரோக்கிய எட்வின், சுடலைக்கண்ணு, வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, பகுதி செயலாளர்கள் சுப்பிரமணியன், கே.ராஜூ, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஞானராஜ், மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் முருகையா, இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.