நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்

பாளையங்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி, நான்குவழிச்சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-14 20:21 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி, நான்குவழிச்சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

மேம்பாலம் அமைக்க...
பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் கிராமத்திற்கு பாளையங்கோட்டை நான்குவழிச்சாலை வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இந்த நான்குவழிச்சாலையில் கீழநத்தம் விலக்கு பகுதியில் சாலையை பொதுமக்கள் கடக்கும்போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. 
எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு வளைவுகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எதிரொலிப்பான்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கீழ நத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அப்போது அங்கு போராட்டம் நடத்திய பொதுமக்கள், நான்குவழிச்சாலையில் உடனே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.

சாலை மறியல்
இந்த நிலையில் கீழநத்தம் கிராம மக்கள் நேற்று காலையில் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நான்குவழிச்சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்