காதலர் தினத்திற்கு எதிராக தெரு நாய்களுக்கு திருமணம்
நெல்லை அருகே காதலர் தினத்துக்கு எதிராக தெரு நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
சேரன்மாதேவி:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இளைஞர்கள் தங்களது காதலிக்கு ரோஜா பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கி மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால், காதலர் தினத்திற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும், மற்றொரு புறம் எதிர்ப்புகளும் உள்ளன.
நெல்லை அருகே நேற்று காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதாவது, நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ளது பிராஞ்சேரி கிராமம். இங்கு இந்து முன்னணி அமைப்பினர் நேற்று 2 தெருநாய்களை பிடித்து அவற்றிக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காதலர் தினத்திற்கு எதிராக நூதன முறையில் தெரு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தனர். இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பத்தமடை நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கொம்பையா, இந்து அன்னையர் முன்னணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.