தாராசுரம் கோவிலுக்கு தாலி கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராசுரம் கோவிலுக்கு தாலி கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Update: 2022-02-14 19:59 GMT
கும்பகோணம்:
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராசுரம் கோவிலுக்கு தாலி கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
காதலர் தினம் 
பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் தாராபுரம் பகுதியில் உள்ள ஐராவதீஸ்வரர்  கோவிலில் அமைந்துள்ள பூங்காவுக்கு ஏராளமான காதல் ஜோடிகள் வருவது வழக்கம். 
இங்கு தினமும் காதல் ஜோடிகள் பலர் வந்து எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாராசுரம் கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் நேற்று காலை இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, நகரத் தலைவர் மதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் தாலி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் கோஷங்களை எழுப்பி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். 
கைது 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் தாராசுரம் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் அங்கு வந்த காதல்ஜோடிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.  

மேலும் செய்திகள்