ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுமா?
விருதுநகருக்கு ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர்,
விருதுநகருக்கு ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் பிரச்சினை
விருதுநகர் நகராட்சி பகுதி குடிநீர் பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்தின் தொடக்கத்தில் ஆனைக்குட்டம் அணைப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண கைகொடுத்தது. ஆனாலும் அணையின் ஷட்டர் பழுது, குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் ஆனை க்குட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதிலும் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் காரிசேரி கல்குவாரி, சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம் ஆகியவை பெயரளவுக்கு குடிநீர் ஆதாரங்களாக இருந்து வருகின்றன. இந்தநிலையில் விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரியை விருதுநகர் குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்தது.
பாதை அடைப்பு
அதன் மூலம் ஒண்டிப்புலி கல் குவாரி குடிநீர் விருதுநகர் குடிநீர் வினியோகத்திற்கு ஓரளவு கை கொடுத்து வந்தது. இருந்தபோதிலும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது ஒண்டிப் புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பாதை அடைபட்டு, விருதுநகருக்கு குடிநீர் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் தொடர் வறட்சி காரணமாகவும், குவாரியில் தண்ணீர் இல்லாத நிலையில் இந்த கல்குவாரி குடிநீர் பிரச்சினைக்கு உதவிகரமாக இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அணைப்பகுதி மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு குடிநீர் பிரச்சினையை சமாளித்து வருகிறது. ஆனாலும் வரும் கோடையில் குடிநீர் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எதிர்பார்ப்பு
தற்போதுள்ள நிலையில் ஒண்டிப்புலி கல்குவாரியில் 45 அடி தண்ணீர் உள்ளது. எனவே தற்போதே ஒண்டிப்புலி குவாரியில் இருந்து விருதுநகருக்கு குடிநீர் கொண்டு வரும் பாதையினை சீரமைத்து குடிநீர் வினியோகத்திற்கு அதனை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை.
எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் தற்போது ஒண்டிப்புலி கல் குவாரியில் இருந்து விருதுநகருக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதை முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து விருதுநகருக்கு கல்குவாரி தண்ணீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.