2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி 2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. காவிரி பாசன பகுதி என்பதால் நெல் சாகுபடியே அதிகம். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை ஆண்டுதோறும் செங்கமேட்டில் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். கடந்த குறுவை பருவத்தின்போதும் இங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக சம்பா அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் நிலையம் திறக்கப்படும் பகுதியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.
சாலை மறியல்
ஆனால், ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செங்கமேடு பகுதி விவசாயிகள் நேற்று கறம்பக்குடிக்கு திரண்டு வந்து சீனி கடைமுக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக மண்டல துணை மேலாளர் பாலகுரு, கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டு வந்தது. இங்கு செயல்பட்டுவந்த நெல் கொள்முதல் நிலையத்தை ஊராட்சியின் பெரிய கிராமமாகவும், அதிக பகுதிகளை கொண்ட வேம்பன்பட்டியில் திறக்க வேண்டுமென அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இங்கு திறக்கப்படாமல் ஏற்கனவே செயல்பட்டு வந்த புதுப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் வேம்பன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் தாசில்தார் புவியரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியலை தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.