இட்லி மாவில் விஷம் கலந்து தாய், தந்தையை கொல்ல முயற்சி

விக்கிரவாண்டி அருகே இட்லி மாவில் விஷம் கலந்து தாய், தந்தையை கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 19:26 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டியை அடுத்த சிறுவை கிராமத்தை சேர்ந்தவர் தம்புசாமி (வயது 78). விவசாயியான இவர் தனது மனைவி தனகோடியுடன் (70) நேற்று காலை விஷம் கலந்த இட்லி மாவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலம் எனது மனைவியின் பெயரில் உள்ளது. அந்த நிலத்தில் எங்களது 2-வது மகன் மோகன்தாஸ் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் இருவரையும் சரியாக கவனிக்காமல் உணவுகூட அளிக்காமல் துன்புறுத்தி வருகிறார். மேலும் எங்கள் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி மோகன்தாஸ் கேட்டு கடந்த ஒரு வாரமாக எங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி வருகிறார். 

நடவடிக்கை

இதுகுறித்து மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தினார். ஆனால் அதற்கு மறுத்து நாங்கள் எங்களுடைய வீட்டிலேயே இருந்தோம். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு இட்லி தயார் செய்வதற்காக தனகோடி, மாவினை எடுத்து வந்தார். அப்போது மாவின் நிறம் நீலநிறமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி மோகன்தாசிடம் கேட்டதற்கு சொத்துக்களை எனக்கு  எழுதி தராத நீங்கள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டுமென கூறியதோடு மாவில் பூச்சிமருந்தை கலந்ததாகவும் கூறினார்.  சொத்துக்காக பெற்ற மகனே உணவில் விஷம் வைத்து எங்களை கொலை செய்ய சதி செய்துள்ளது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்