பூத் சிலிப்பை மொத்தமாக வழங்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை. வேலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரசியல் கட்சியினரிடம் பூத்சிலிப்பை மொத்தமாக வழங்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.

Update: 2022-02-14 18:34 GMT
வேலூர்

அரசியல் கட்சியினரிடம் பூத்சிலிப்பை மொத்தமாக வழங்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்களிப்பதன் முக்கியத்துவம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி எனது வாக்கு, எனது எதிர்காலம் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகள் அனைவருக்கும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் சென்று சேரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படுகிறது. நகர்ப்புற பகுதியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் சிலருக்கு சென்று சேரவில்லை. அந்த குறையை போக்க பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

‘எனது வாக்கு, எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பாட்டு, வினாடி-வினா, வாசகம் எழுதுதல், காணொலி காட்சி தயாரித்தல், விளம்பரபடம் வடிவமைத்தல் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. ஆன்லைனில் நடைபெறும் போட்டியில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் பங்கேற்கலாம். போட்டிக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் கூடுதல் தகவல்களை போட்டியாளர்கள் https://ecisveep.nic.in/contest/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

பூத்சிலிப் வழங்கினால் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது. அவை அறைகளில் பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியின்போது பெங்களூருவை சேர்ந்த பெல்நிறுவன பொறியாளர்கள் உடனிருந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். அவர்கள் வாக்குப்பதிவின்போதும் உதவி செய்ய உள்ளனர். நகர்ப்புற தேர்தல் பணியில் ஈடுபடும் 1,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 540 போலீசார் என்று மொத்தம் 2,040 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் அளித்துள்ளனர். வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத்சிலிப் அளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வருகிற 17-ந் தேதிக்குள் அனைவருக்கும் பூத்சிலிப் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டிய பூத்சிலிப்பை மொத்தமாக அரசியல் கட்சியினரிடம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வழங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் உள்ள 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக இறுதிமுடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு, வெப் கேமராக்கள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை வழக்குகள் எதுவும் பதிவாக இல்லை. நகர்ப்புற தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பேட்டியின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல்பிரிவு தாசில்தார் சச்சிதானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்