வாணியம்பாடியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி. ஆம்பூரில் வாடிக்கையாளர்கள் முற்றுகை
இளைஞர்களை வேலைக்கு சேர்த்து ரூ.5 கோடிவரை மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிதி நிறுவனம் மீது போலீஸ்சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வாணியம்பாடி
இளைஞர்களை வேலைக்கு சேர்த்து ரூ.5 கோடிவரை மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிதி நிறுவனம் மீது போலீஸ்சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நிதி நிறுவனம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற சுவரொட்டியின் மூலம் படித்த இளைஞர்களுக்கு ரூ.9,000 முதல் 14 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என ஒரு தனியார் நிதி நிறுவனம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் இந்த நிதி நிறுவனத்தில் இணைந்து உள்ளனர்.
பின்னர் நிதி நிறுவனத்தினர் எங்களுடைய நிறுவனம் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கிளைகளை தற்போது நிறுவி உள்ளோம். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். முறையான ஊதியம் வழங்கப்படும் என கூறி 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்கு எடுத்தனர்.
ரூ.5 கோடி மோசடி
அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் பத்திர ஆவணங்கள் இல்லையென்றாலும் வங்கியின் காசோலையை வைத்து ரூ.1.20 பைசா வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் என்றும், இதில் பொதுமக்களை இணைத்து விட்டால் மட்டுமே உரிய ஊதியம் வழங்கப்படும் எனவும் வேலைக்குச் சேர்ந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய இளைஞர்கள் வாணியம்பாடி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை இணைத்து விட்டனர். அதனைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இணைய ஒருவருக்கு ரூ.1000, கடன் வழங்க அனுமதி பெற்றவர்களிடம் ரூ.1 லட்சத்திற்கு ரூ.5000 என வாணியம்பாடியில் ரூ.25 லட்சம், திருப்பத்தூர், ஆம்பூர் பகுதிகளில் சுமார் ரூ.5 கோடி வரை வசூல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என நிறுவனம் கூறி விட்டு, இரவோடு இரவாக நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்றுள்ளனர். நேற்று வேலைக்கு வந்த இளைஞர்கள் நிறுவனம் மூடிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்ததும் நிதி நிறுவனத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் அனைவரும், பணத்தை வாங்கிக் கொடுத்த இளைஞர்களிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
புகார்
இதன் காரணமாக இளைஞர்கள் அனைவரும் பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களை நம்பி பணம் செலுத்திய பொதுமக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் 60-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
சினிமாவில் வருவது போல பணத்தை வசூல் செய்து விட்டு ஒரே நாள் இரவில் நிறுவனத்தை இழுத்து மூடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முற்றுகை
அதேபோன்று ஆம்பூரை அடுத்த துத்திபட்டு பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று நிதி நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது நிதி நிறுவனம் பூட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நிதி நிறுவன ஊழியர்களின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.