சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்; ஈஸ்வரன் பேச்சு

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.

Update: 2022-02-14 17:55 GMT
கரூர்
கரூர்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கரூர் வெள்ளாளப்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,  கடந்த சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வினர் வெற்றி பெற்றார்களோ அதுபோல் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றியை கரூர் மாவட்டம் பெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். இரவு பகலாக எல்லோரும் பணி புரிந்து வாக்கு சேகரித்து வருகிறீர்கள். உங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல தான் நான் இங்கு வந்துள்ளேன். கரூர் மக்களுக்கு செந்தில்பாலாஜிபோல் அமைச்சர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். சென்னையில் உள்ளது போல் பல திட்டங்களை கொண்டு வர அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சி செய்து வருகிறார். முழுமையான எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என அவர் பணியாற்றி வருகிறார். 
முதல்-அமைச்சரும் அதற்கு முக்கியதுவம் கொடுத்துள்ளார். முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். பாதிக்கும் மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். எஞ்சியுள்ள வாக்குறுதிகளும் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் நிறைவேற்றி ஓராண்டு முடிவதற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவார். வெகு விரைவில் குடும்ப தலைவி கையில் மாதம் ரூ.1000 கொடுக்கப்படும். எனவே பல திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க உதய சூரியன் கூட்டணி கட்சிக்கு வாக்களித்து முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். 
அப்போது மாநில வர்த்தக அணி செயலாளர் வி.ச.சண்முகம், மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்