கோவையில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை

கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-14 17:52 GMT
போத்தனூர்

கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

கோவையை அடுத்த வெள்ளலூர் அருகே உள்ள கோனவாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் தனது நண்பர் சரவணன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா (24) நடந்து சென்றார். குடிபோதையில் இருந்த டேவிட் ராஜா அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்காக ரோட்டில் சென்றவர்களிடம் தகராறு செய்கிறாய் என்று தட்டிக்கேட்டார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டேவிட் ராஜா அருகில் கிடந்த கட்டையால் கந்தசாமியை தலையில் சரமாரியாக தாக்கினர். பின்னர் டேவிட் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கைது

இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி வலி தாங்க முடியாமல் அலறி துடித்து மயங்கி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போத்தனூார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற டேவிட் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு  செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளியை வாலிபர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்