காதலர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்

காதலர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி அணை பூங்காவில் நேற்று காதல் ஜோடியினர் குவிந்தனர்.

Update: 2022-02-14 16:49 GMT
கிருஷ்ணகிரி:
காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மற்றும் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். மேலும் புதுமண தம்பதியினரும் பரிசுகளை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். 
அதேபோல நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை கொண்டாட கிருஷ்ணகிரி அணை பூங்கா பகுதியில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். இதேபோல் புதுமண தம்பதியினரும் பூங்காவில் திரண்டனர். அவர்கள் மரத்தடியில் அமர்ந்தபடி பேசி பொழுதை கழித்தனர். மேலும் ரோஜாப்பூ, சாக்லெட் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி, வாழ்த்தினை பரிமாறி கொண்டனர்.
ஒரே வண்ணத்தில் ஆடை
சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சில காதல் ஜோடியினர் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்ததையும் காண முடிந்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கிருஷ்ணகிரி அணை போலீசார், அணை பூங்காவில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கொரோனா பரவல் காரணமாக வெளியே வர முடியாத காதல் ஜோடியினர் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

மேலும் செய்திகள்