நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தண்ணீர் திறப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
தமிழக அரசின் உத்தரவுப்படி நாகாவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் ஆயக்கட்டு பகுதியில் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 2 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 5 நாட்கள் தண்ணீர் விட்டும், 5 நாட்கள் தண்ணீர் நிறுத்தியும் வினாடிக்கு 39.80 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1,993 ஏக்கர் பாசன வசதி
இதன் மூலம் அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி, பெரும்பாலை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயத்திற்கு மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். தண்ணீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் விமலநாதன் உள்பட துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.