அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 ஆயிரம் பக்தர்கள்
அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 4 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த வருடம் 33-வது ஆண்டாக பக்தர்கள் நேற்று சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதற்கு முன்னதாக காலை 8 மணி அளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் மஞ்சள், சிவப்புநிற உடை அணிந்து அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூடினர்.
பின்னர் அவர்கள் கோவிலில் பிரசாதம் பெற்றுக்கொண்டு மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.