வாலிபர் தலை துண்டித்து படுகொலை

வாலிபர் தலை துண்டித்து படுகொலை

Update: 2022-02-14 14:01 GMT
திருப்பூரில் செல்போன், பணத்தை பறித்துக்ெகாண்டு வாலிபரை தலை துண்டித்து படுகொலை செய்த 5 பேர் கும்பல், அவரது நண்பரையும் கத்தயால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-
வாலிபர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா போனேரிராஜபுரம்  வைக்கிள் கீழத்தெருவை சேர்ந்தவர்  மகாலிங்கம். இவருடைய மகன்  சதீஷ்குமார் வயது 23. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்  திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு எம்பிராய்டரிங் நிறுவனத்தில் தங்கி அங்கேயே வேலை செய்து வந்தார். இவருடன் திருச்சி  திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த  தனபால் என்பவரது மகன்  ரஞ்சித் 22 என்பவரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால் நண்பர்களானார்கள். 
 இந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் செரங்காடு  பாரதிநகர் பகுதியில் உள்ள நிறுவனத்தில் இருவரும் வேலை செய்து அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்திற்கு விடுமுறை என்பதால் சதீஷ்குமாரும், அவருடைய நண்பர்  ரஞ்சித்தும் செரங்காடு காட்டுப்பகுதிக்கு இரவு  8.30 மணிக்கு  மது குடிக்க சென்றனர். அங்கு இருவரும் முதல் ரவுண்டு மது குடித்த பின்னர் 2வது ரவுண்டு மதுகுடிப்பதற்காக அந்தபகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க சென்றனர். பின்னர் இருவரும் மதுவாங்கிக்கொண்டு மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த  5 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் இவர்களை வழிமறித்து, செல்போன் மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கவே அந்த கும்பல் அவர்கள்  2 பேரையும் கடுமையாக தாக்கியது. 
தலையை துண்டித்து படுகொலை
இதனால் பயந்துபோன ரஞ்சித் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் பயந்துபோன சதீஷ்குமார் தனது செல்போன் மூலம் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு, நான் இந்த வழிப்பறி கும்பலிடம் சிக்கி  தவிக்கும்போது நீ  மட்டும் ஓட்டம் பிடித்தது சரிதானா என்னை காப்பாற்ற வாடா?  என்று அழைத்துள்ளார். இதையடுத்து ரஞ்சித் மீண்டும் சதீஷ்குமார் இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது அந்த கும்பல் ரஞ்சித்தை ஆயுதத்தால் தாக்கி, வயிற்றில் கத்தியால் குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி வந்த ரஞ்சித் ஒரு நிறுவனம் முன்பு  விழுந்தார். 
வாலிபர் ஒருவர் பனியன் நிறுவனம் முன்பு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அந்தபகுதியில் உள்ளவர்கள் பார்த்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்துப் பட்டு கிடந்த ரஞ்சித்தை மீட்டு ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது ரஞ்சித் போலீசாரிடம், என்னை கத்தியால் குத்திய கும்பல் எனது நண்பர் சதீஷ்குமாரை பிடித்துவைத்து தாக்குகிறது. அவரை வழிப்பறி கும்பலிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்றார். இதையடுத்து  சதீஷ்குமாரை மீட்க போலீசார் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலை குலைய செய்தது. சதீஷ்குமார் உடல் மட்டும் கிடந்தது. அவருடைய தலையை காணவில்லை. வழிப்பறி கும்பல் சதீஷ்குமாரிடம் இருந்து  செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு, அதன்பின்னர் அவருடைய தலையை துண்டித்து கொலை செய்து  உடலை அங்ேகயே போட்டு விட்டு, தலையை கொண்டு சென்று உள்ளனர்.  இதையடுத்து சதீஷ்குமார் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணியை போலீசார் கைவிட்டனர். பின்னர் சதீஷ்குமார் உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
தனிப்படை அமைப்பு
பின்னர் நேற்று காலை கொலை நடந்த இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர்  ரவி, உதவி கமிஷனர்  லட்சுமண பெருமாள், இன்ஸ்பெக்டர்  ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த ேமாப்பநாய், சதீஷ்குமார் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாைரயும் கவ்வி பிடிக்கவில்லை. அதை ெதாடர்ந்து தடய அறிவியல்  நிபுணர்கள் வந்து கொலை நடந்த இடத்தில் தடயம் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். இதற்கிடையில் நேற்று மாலை வரை சதீஷ்குமார் தலையை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. 
இந்த கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வழிப்பறி கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். திருப்பூரில் வழிப்பறி கும்பல் வாலிபரை மிரட்டி பணம் செல்போனை பறித்து அவருடைய தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்