தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ரவுடிகள் அதிரடி கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 35 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 35 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். 261 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
35 ரவுடிகள் கைது
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 261 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி வாக்களிப்பதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் ஏதுவாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 170 பதற்றமான வாக்குசாவடி பகுதிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் துறைக்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பவித்ரா, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜன் (தென்பாகம்), ஜெயபிரகாஷ் (மத்தியபாகம்), ரபி சுஜீன் ஜோஸ் (வடபாகம்), ரமேஷ் (புதுக்கோட்டை), பாஸ்கரன் (முறப்பநாடு), சண்முகம் (சிப்காட்) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.