திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூரில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், சர்ப்பம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி விமானம், யானை மற்றும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர்-மனோன்மணி தாயார் ஆகியோருக்கு அபிஷேகம். அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து 16 கால் மண்டபம் முன்பு இருந்து கைலாய வாத்தியங்கள் மற்றும் சங்க நாதம் முழங்க, சிவனடியார்கள் நடனமாட 41 அடி உயர தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலர் சந்திரமோகன், இணை கமிஷனர் தனபால், உதவி கமிஷனர் சித்ராதேவி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ. சங்கர், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள், “தியாகேசா, ஒற்றீசா” என்று பக்தி கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரை வரவேற்கும் விதமாக சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க ஒய்யாரமாக நடனமாடி வந்தனர். அத்துடன் சிறுவர், சிறுமிகள் தேர் முன்பு கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனர்.
தேர் சன்னதி தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் சன்னதி தெருவில் உள்ள தேர்நிலையில் வந்து நிலை நிறுத்தப்பட்டது.
விழாவில் வருகிற 15-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், 17-ந் தேதி இரவில் தியாகராஜ சாமி பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.