மு.க.ஸ்டாலினுடன், நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் சந்தித்து பேசினார்.
பெங்களூரு:
நடிகர் புனித்ராஜ்குமார்
கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் திடீரென மரணம் அடைந்தார். இளம் வயதில் அவர் மரணம் அடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிறகு ராஜ்குமாரின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. அதாவது மறைந்த நடிகர் ராஜ்குமார் தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமாரை விட புனித் ராஜ்குமார் மேல்தான் அதிக பாசம் வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில் திடீரென நிகழ்ந்த புனித் ராஜ்குமாரின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது கன்னட திரைஉலகம், அவரது ரசிகர்கள் உள்பட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மு.க.ஸ்டாலின் கடிதம்
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு அவர் நடத்தி வந்த சினிமா ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை அவரது மனைவி அஸ்வினி கவனித்து வருகிறார். அதேபோல் புனித் ராஜ்குமார் நடத்தி வந்த மைசூருவில் உள்ள சக்தி தாமா ஆதரவற்றோர் இல்லத்தை சிவராஜ்குமாரின் மனைவி கீதா நிர்வகித்து வருகிறார். மேலும் பிற பொறுப்புகளை நடிகர் சிவராஜ்குமார் கவனித்து வருகிறார்.
இதற்கிடையே புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
சந்திப்பு
இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமாரும், அவரது மனைவி கீதாவும் நேற்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு சென்றனர். அவர்கள் அங்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். மேலும் நடிகர் சிவராஜ்குமாரிடம் நலம் விசாரித்து குடும்பநலன் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.