ஈரோட்டில் துணிகரம் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிதி நிறுவன அதிபர்
ஈரோடு வீரப்பம்பாளையம் யு.ஆர்.சி.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (வயது 59). நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த 9-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்தது.
5 பவுன் நகை
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பன்னீர்செல்வன் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பன்னீர்செல்வன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.