தேர்தல் பறக்கும் படை சோதனை: குமரியில் இதுவரை ரூ.41 லட்சம் பறிமுதல்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-13 20:24 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வினியோகிப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 75 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திற்பரப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.63 ஆயிரத்து 800 இருந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 இதன் மூலம் குமரி மாவட்டத்தில் பறக்கும் படை குழுக்களால் மொத்தம் ரூ.41 லட்சத்து 3 ஆயிரத்து 670 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்