வயலுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்கள் சேதம்
கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திச் சென்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திச் சென்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தை சேர்ந்த 80 அடி கால்வாய், சீரங்குளம் பாசனத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. அதில் பொட்டல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டலை சேர்ந்த இசக்கி, ஜெயபால், மகாதேவன், சண்முகம், மாசானம் ஆகியோருக்கு பாத்தியப்பட்ட சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயலுக்குள் யானை கூட்டம் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தின.
விவசாயிகள் கவலை
மேலும் கல்லிடைக்குறிச்சி கோட்டை தெருவைச் சேர்ந்த சித்திரை கோனார் மற்றும் ராஜகோபால் ஆகியோருக்கு பாத்தியப்பட்ட தென்னந்தோப்பில் புகுந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சாய்த்து சேதப்படுத்திச் சென்றது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் யானைக் கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.