“தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றும்”
“தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றும்” என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை,
“தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றும்” என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
27 வார்டுகளில் போட்டி
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சிவகங்கை வீரமாகாளியம்மன் கோவில் வீதி மற்றும் ராமச்சந்திரனார் பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாராது வந்த மாமணி போல் நகராட்சி தேர்தல் வந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய தேர்தல் இது. ஆனால் கடந்த 6 ஆண்டாக நடத்தவில்லை. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டத்தை மதிப்பவர்களாக கூறும் அ.தி.மு.க. ஏன் கடந்த 5 ஆண்டாக இந்த தேர்தலை நடத்தவில்லை?
மத்தியிலும் மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அதற்கு கீழே மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி, போன்றவைகளில் இருந்தால்தான் மக்கள் பணிகளை சரிவர நடத்த முடியும். அதைத்தான் நமது தேர்தல் சாசனம், அரசியல் சாசனம் வரையறுக்கிறது. மாநில அரசு விவகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைக்க முடியாது. மாநில அரசு நமது பணத்தில் மருத்துவகல்லூரிகளை கட்டுகிறது. ஆனால் அதில் மத்திய அரசு நீட் தேர்வு வைத்து மூடி மறைக்கிறது.
கேட்க வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். உங்களிடம் ஓட்டு கேட்க அக்கட்சியினர் வரும்போது ஏன் 5 ஆண்டு இந்த தேர்தல் நடத்தவில்லை என்று நீங்கள் கேட்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்துவோம் என்று தி.மு.க. கூறியது. அதை தற்போது நிறைவேற்றி விட்டார்கள். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை தி.மு.க. அரசு படிப்படியாக நிறைவேற்றும். 5 ஆண்டு ஆட்சி முடிவதற்குள் அவர்கள் கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார்கள்.
அலுவலகம்
தற்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக தங்கள் வார்டுகளில் ஒரு அலுவலகம் திறக்க வேண்டும். அதில் ஒரு பதிவேட்டை வைத்து வார்டு மக்களின் குறைகளை குறித்து வைத்து படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.