வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி
விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே இருப்பதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி வாக்கு எண்ணும் மைய வளாகம், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை உள்பட பல்வேறு இடங்களை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் மின் விளக்கு அமைக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பணியை தேர்தல் அலுவலர் அண்ணாதுரை பார்வையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம், வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது. இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், டெக்னீஷியன் ராஜ் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.