எந்திரங்களின் வாடகை அதிகரிப்பு
திருமருகல் ஒன்றியத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடை பெற்றுவரும் நிலையில் தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அறுவடை பணிகள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கின்றன. இதில் நாகை மாவட்டம் காவிரியின் கடைமடை பகுதிகளில் ஒன்றாகும். இங்கு உள்ள ஆறுகளில் தண்ணீர் தேவையான அளவு வந்தால் மட்டுமே விவசாயிகளால் நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பருவமழையால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்து விவசாயிகள் நஷ்டம் அடைவதும் நடக்கிறது.
இயற்கை இடர்பாடுகளால் நாகை மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் எதிர்பார்த்த அளவு லாபத்தை ஈட்டுவது என்பது எப்போதும் எட்டாக்கனியாகவே உள்ளது.
வாடகை கட்டணம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நடப்பு பருவத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்து இருந்தனர். இங்கு அறுவடை பணிகள் கடந்த மாதம் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா அறுவடை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் அறுவடை எந்திரங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்பட்ட சம்பா பயிர் பருவ கால மழையினால் பாதிக்கப்பட்டதால் மகசூல் ஏக்கருக்கு 20 மூட்டைக்கு கீழ் தான் கிடைக்கிறது. தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,700 வரை தர வேண்டி உள்ளது.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
எனவே தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் முறையில் கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
வியாபாரிகள் தலையீடு என்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் பதிவு முறையில் சர்வர் பிரச்சினையால் நெல்லை விற்பனை செய்வதிலும், விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணம் பெறுவதிலும் சற்று காலதாமதமாகிறது. இந்த குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.