வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-13 14:49 GMT
நெகமம்

பொள்ளாச்சி  நகராட்சியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு  செல்வநாகரத்தினம் ஆய்வு செய்தார். 

நகராட்சி தேர்தல்

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 39 ஆயிரத்து 543 பேரும், பெண் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 777 பேர், மூன்றாம் பாலினத்தவர் 33 பேர் என மொத்தம் 82 ஆயிரத்து 353 வாக்காளர்கள் உள்ளனர். 19-ந்தேதி நகராட்சி தேர்தல் நடக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர்,  பா.ஜ.க., ம.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம., மார்க்சிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 
151 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 22-ந்தேதி பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரியில் நடக்கிறது.
இதற்கான ஆயத்த பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி உடனிருந்தார். முன்னதாக, மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவேண்டும், வாக்குப்பதிவு சுமுகமாக நடக்க நடவடிக்கை மேற்கொள்ள கொண்டும்.தவறு செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது.

6 வாக்குச்சாவடிகள் 

நெகமம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 44 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 42 பேர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் 8 வார்டுகளில் தி.மு.க. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. 
மேலும் ஒரு வேட்பாளர் சுயேச்சையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 6 வார்டுகளுக்கு மட்டும் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 6 வார்டுகளில் 14 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி காளியப்பம்பாளையம், நாகர் மைதானம், நெகமம் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய 3 இடங்களில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

இந்த வாக்குச்சாவடிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, நெகமம் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், வாக்குச்சாவடி தயார் நிலையில் உள்ளதா, வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தனர். 
மேலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களில் மின்சார வசதி உள்ளதா, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா? கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
 நெகமம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்