திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தென்திருப்பேரை:
கைலாயத்தில் சிவபெருமானை தரிசனம் செய்ய சென்றபோது குபேரன் பார்வதியின் சாபத்திற்கு ஆளாகி தன்னுடைய பொன், பொருள் அனைத்தையும் இழந்து விடுகிறார். அதன்பின்னர் நீண்ட காலம் குபேரன் தவம் இருக்கிறார். அவரது தவத்தை மெச்சி திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் அவரது சாபத்தை நீக்கி இழந்த செல்வத்தில் ஒரு பகுதியை வழங்குகிறார். இந்த நிகழ்வு நடந்தது ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருக்ேகாளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில். இந்த கோவில் நவத்திருப்பதி தலங்களில் எட்டாவது தலமாகும்.
இதுதொடர்பான நிகழ்ச்சி இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் வைத்தமாநிதி பெருமாளை வணங்கினால் வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்தாண்டு நேற்று அதிகாலையில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவரான வைத்தமாநிதி பெருமாளுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டது. முன் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சயன கோலத்தில் இருக்கும் வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்தனர்.