ஒரு நாட்டின் மேன்மையை போற்றுவதில் அங்குள்ள வன வளம் முக்கியமாக கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஒரு நாட்டின் 3 ல் ஒரு பங்கு வனப்பகுதி இருப்பது அவசியம் என வலியுறுத்துகிறது. அந்த வகையில் இந்தியாவில் வன வளம் என்பது அபரிமிதமாகவே உள்ளது. ஆனால் வனங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் என்ற விசயத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் பெரியளவில் அலட்சியம் காட்டுகின்றனர் என்றே சொல்லலாம்.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் சில வனப்பகுதியாக அமைந்துள்ளன. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வளமான வனப்பகுதியும், யானை, மான், புலி,சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. தெளிந்த நீரோடை, அருவி, காட்டாறு உள்ளிட்டவைகளுக்கும், அரிய வகை தாவரங்கள், செடி, கொடிகளும், பறவையினங்களும் அதிகளவில் உள்ளன.
இயற்கையை பொறுத்த வரை வாழ்வியல் என்பது ஒன்றை ஒன்று சார்ந்தே சங்கிலி தொடராக அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளுக்கு உணவும், நீரும் அவசியமாகிறது. வன விலங்குகளுக்கு அத்தியாவசிய தேவையான உணவு, நீர்பற்றாக்குறை ஏற்படும்போது, அவற்றுக்காக அவை தனது வாழ்விடத்தை மாற்றி வலசை செல்கின்றன.
அடர்ந்தகாடுகளும், வன விலங்குகளும், பறவைகளும் மனிதர்களுக்கு தேவையான அடிப்படைகளில் பெரும்பாலானவைகளை வழங்கினாலும், சிலரின் சுயநலத்துக்காக வனப்பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வன விலங்குகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை தனது தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழியை ஏற்படுத்தி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள், மனித வாழ்விடங்களான ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு வெளியேறும் வன விலங்குகளால் அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறு, விவசாய நிலங்கள் சேதம், மனித-வன விலங்கு மோதல்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இதனால் விலங்குகள் அச்சுறுத்தப்பட்டாலும், அதிகமான பாதிப்பு என்பது மனிதர்களுக்கே ஏற்படுகிறது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் இந்த நிலை என நகரின் மையப்பகுதிகளில் வாழ்பவர்கள் பெருமூச்சு விட்ட நிலையில் தற்ேபாது வன விலங்குகள் மாநகருக்குள்ளும் வலம் வர தொடங்கியுள்ளன. சினிமா, தொலைக்காட்சி, புகைப்படங்களில் மட்டுமே பார்க்கப்பட்ட வன விலங்குகள் சில தற்போது திருப்பூர் மாநகரின் பல பகுதிகளிலும் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த சிறுத்தை ஒன்று திருப்பூர் மாவட்டத்தை கதிகலக்கியது. இறுதியாக திருப்பூர் மாநகர் வரை வந்த அந்த சிறுத்தை, வனத்துறை ஊழியர் உள்பட சுமார் 10 பேரை தாக்கியது. இறுதியில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் நாட்கணக்கில் போராடி அந்த சிறுத்தையை உயிருடன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் புனுகுப்பூனை ஒன்று திருப்பூர் மாநகருக்குள் நுழைந்தது. ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆக்ரோஷத்துடன் பதுங்கியிருந்த அந்த புனுகுப்பூனையை தீயணைப்பு துறையினர் மிகுந்த போராட்டத்துக்கிடையே பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், திருப்பூர் மாநகரில் அடிக்கடி புள்ளி மான்கள் அதிகளவில் சுற்றித்திரிவதையும் காணமுடிகிறது. மான்கள், மயில்கள், முயல் உள்ளிட்டவைகளும் மாநகரில் அதிகளவில் உள்ளது. குறிப்பாக திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம், மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளம் ஆகிய இடங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வலசை வருவதும் ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது. ஊசிவால் வாத்து, கிளுவை, மண்கொத்தி வகைகள், உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும், நீலச்சிறகு வாத்து, பட்டை தலை வாத்து, கூழைக்கிடா, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்டவைகளும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அக்ேடாபர் மாத தொடக்கத்தில் இங்கு வரத் தொடங்கும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்க காலத்தை முடித்து மார்ச் மாதம் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும். இந்த கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாத இந்த குளங்களில் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வலசையாக வருவது அப்பகுதியினரை கவர்ந்துள்ளது. அங்கு காணப்படும் வெளிநாட்டுப்பறவைகள் மட்டுமின்றி அங்கு தன் வாழ்விடத்தை அமைத்துள்ள நீர்க்காக்கைகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
அதுமட்டுமின்றி, திருப்பூரின் சுற்றுவட்டார பகுதியான அவினாசி கோதபாளையம், மங்கலம் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இவை அப்பகுதி குடியிருப்புகளில் வலம் வருவது வாடிக்கையானதாக உள்ளது. இவற்றை பாதுகாக்க வனத்துறை சார்பில் வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட வன விலங்குகளில் சிலவற்றை வேட்டையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதாகவும், தொடர்ந்து அந்த சிறுத்தை ஆடு,மாடு, நாய்களை தாக்கி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அந்த சிறுத்தை திருப்பூர் மாவட்டத்துக்குள் புகுந்து விட்டதாகவும் அவ்வப்போது வதந்திகள் வந்த நிலையில் உள்ளன.
இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வன விலங்குகளை பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு ஈடாகவே கருதப்படுகிறது. வனங்களும், வன விலங்குகளும், அங்குள்ள நீர்நிலைகளும் போதிய அளவில் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். கோடை காலத்்தில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்குகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை முன்னெடுத்து அரசும், பொதுமக்களும் செயல்பட்டால் வன விலங்குகளின் வளமும், பொதுமக்களின் நலமும் காக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.