துபாய், இலங்கைக்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் சிறப்பு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த கை பைகளில் ரகசிய அறை வைத்து தைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா். அந்த ரகசிய அறைக்குள் திறந்து பார்த்த போது, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலா்களை கைப்பற்றினார்கள். அதேப்போல் துபாய் செல்ல வந்த 2 வாலிபர்கள் கொண்டு வந்த சூட்கேசை சந்தேகத்தின் பேரில் சோதித்தபோது, அதில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.14 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கைப்பற்றினார்கள்.
ஆக மொத்தம் 3 பேரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.