பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்: ஏழை மக்களை பற்றி தி.மு.க அரசுக்கு கவலை இல்லை-தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் ஏழை மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Update: 2022-02-12 21:47 GMT
சேலம்:
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் ஏழை மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை  இல்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 
அதன்படி பனமரத்துப்பட்டி, மல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. செல்வாக்கு சரிவு
சமீபத்தில் பனமரத்துப்பட்டி அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க.வினர் கடத்தி சென்றார்கள். தி.மு.க. செல்வாக்கு மக்களிடத்தில் சரிந்துவிட்டது. நேரடியாக அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு போட்டியிடுபவர்களை மிரட்டுவது, வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை மிரட்டி அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது எல்லாம் வெட்க கேடான விஷயம்.
தேர்தல் எதற்காக வைத்துள்ளார்கள்? ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் தேர்ந்தெடுக்கின்ற ஒரு கட்சி பிரதிநிதி, அந்த பகுதி மக்களுக்கு நன்மை செய்வார். அந்த அடிப்படையில் தான் இந்த நகர்ப்புற தேர்தலும் நடைபெற உள்ளது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்தவர்கள், இந்த நோக்கத்தையே சிதைக்கிறார்கள். ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கிறார்கள்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் எந்த பிரச்சினைக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக இருந்தார்கள். ஆனால் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும்.
அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது ரூ.652 கோடியில் புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை கூட தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. தி.மு.க.வினர் பேசுவது எல்லாம் பொய் தான். தி.மு.க.வின் மூலதனமே பொய் மட்டும் தான். அதை வைத்து தான் கட்சியையே நடத்தி கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள்.
நகைக்கடன் தள்ளுபடி
2021 சட்டமன்ற தேர்தலின்போது மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தந்திரமாக நிறைய அறிவிப்புகளை வெளியிட்டனர். அதாவது இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறினார்கள்? இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல், கியாஸ் சிலிண்டர் ரூ.100 மானியம், முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, கல்விக்கடன் ரத்து, பேரூராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினர். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை.
தேர்தலில் வாக்கு கேட்கும்போது 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து தான் ஓட்டு கேட்டீர்கள். தகுதியானவர்களுக்கு மட்டும்தான் நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தால் மக்கள் யாரும் ஏமாந்து இருக்க மாட்டார்கள். பனமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 517 பேர் நகைக்கடன் பெற்றுள்ளனர். ஆனால் 32 பேருக்கு மட்டும் தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ரூ.500 கோடி ஊழல்
கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க.வினர் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை யாரும் மறக்கமாட்டார்கள். கோதுமையில் புழுவும், அரிசியில் வண்டும் கிடந்தது. ஒருசில பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களும் தரமானதாக இல்லை என்று மக்களே தெரிவிக்கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏழை மக்களை பற்றி தி.மு.க.
அரசுக்கு கவலை இல்லை.
கடந்த 10 ஆண்டுகள் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். சொன்னதை அனைத்தும் செய்தது அ.தி.மு.க. அரசு மட்டுமே. எனவே, அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், ராஜமுத்து எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், பாலச்சந்திரன், வெங்கடேஷ், வையாபுரி, மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, நகர செயலாளர்கள் சின்னத்தம்பி என்கிற காளியண்ணன், வெங்கடாஜலம், மாதேஷ், துளசிராஜன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்