பெங்களூருவில் வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி இளம்பெண் கற்பழிப்பு; விபசாரத்தில் தள்ள திட்டம்
பெங்களூருவில் வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்ததுடன், அவரை விபசாரத்தில் தள்ளுவதற்காக டெல்லிக்கு கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
வேலை வாங்கி கொடுப்பதாக...
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு இளம்பெண்ணுடன், வாலிபர் சுற்றித்திரிந்தார். அவர்கள் மீது விமான நிலைய போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் நாகேஷ் என்பதும், அவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
அதே நேரத்தில் அந்த இளம்பெண் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கும், நாகேசுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு நாகேஷ் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும், நாகேசுடன் சென்றிருக்கிறார்.
இளம்பெண் கற்பழிப்பு
இந்த நிலையில், வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை நாகேஷ் கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேலைக்காக இளம்பெண்ணை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக இளம்பெண் போலீசாரிடம் கூறி இருந்தார். ஆனால் அந்த இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதிக்க பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு நாகேஷ் கடத்தி சென்றது தெரியவந்தது.அந்த இளம்பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கற்பழித்ததுடன், விபசாரத்தில் தள்ளுவதற்கும் அவர் திட்டமிட்டு இருந்தார்.
இதற்கு முன்பு ஏராளமான இளம்பெண்களை நாகேஷ் விபசாரத்தில் தள்ளி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாகேசை விமான நிலைய போலீசார் கைது செய்தார்கள். அவருடன் இருந்த இளம்பெண்ணும் மீட்கப்பட்டார். கைதான நாகேஷ் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.