ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது டெம்ேபா, 3 கார்கள் பறிமுதல்
குமரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக கடந்த 2 நாட்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு டெம்போ மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
குமரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக கடந்த 2 நாட்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு டெம்போ மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி கடத்தல்
கருங்கல் போலீசார் நேற்று முன்தினம் கண்டன்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருப்பினும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிறிது தூரம் வாகனத்தில் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட போது அதில் சிறு, சிறு மூடைகளாக 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
உடனே இதுபற்றி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார், கார் டிரைவரான மேக்காமண்டபத்தை சேர்ந்த கிறிஸ்டல் ஆனந்த் (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் காருடன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
டெம்போ-கார்கள் பறிமுதல்
இதேபோல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாணிக்கவிளை பகுதியில் ரோந்து சென்ற போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கார் டிரைவரான படந்தாலுமூடு வெட்டுவிளையை சேர்ந்த ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் அரிசி மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கேசவபுத்தன்துறையில் டெம்போவில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக தெற்கு சூரங்குடியை சேர்ந்த சாமிநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் டெம்போவுடன் 800 கிலோ அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈத்தவிளை பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரான திக்குறிச்சியை சேர்ந்த ரெஜின் என்பவரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர். குமரியில் கடந்த 2 நாட்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 கார்கள், டெம்போ பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.