வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டார்.

Update: 2022-02-12 19:34 GMT
திண்டுக்கல்:
வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டார்.
தேர்தல் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தா லாசரஸ், கலெக்டர் விசாகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கழிப்பறை, மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அல்லது வெப் கேமராக்கள் பொருத்த வேண்டும். இதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
பறக்கும் படை சோதனை
மேலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். இதுதவிர வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள், மேஜை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். அதேபோல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்த வேண்டும். இந்த பறக்கும் படையினரின் செயல்பாடுகளை தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்‌ என்று தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மாறன், ராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்