கன்னியாகுமரி கடலில் மிதந்த வாலிபர் பிணம்
கன்னியாகுமரி கடலில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரது பிணத்தை மீட்டு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரது பிணத்தை மீட்டு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கடல் சங்கமம்
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.
ஆண் பிணம்
இந்தநிலையில் நேற்று அதிகாலை முக்கடல் சங்கம கடற்கரை ஓரமாக கடலில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கு ரோந்து சென்ற சுற்றுலா போலீசார் இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்படி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நம்பியார், சுரேஷ் ஆகியோர் கடலில் மிதந்து வந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை
அப்போது, பிணமாக மிதந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும், இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்த என்ற விவரம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து இங்கு வீசினார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.