6 அடி நீள பாம்பு பிடிபட்டது
மணல்மேடு கொள்முதல் நிலையத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது.
மணல்மேடு:
மணல்மேடு வெள்ளாளர் தெருவில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. தற்போது அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக அடுக்கி வைப்பதும், பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை அரசின் குடோனுக்கு லாரிகளில் ஏற்றி செல்வதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கு இடையில் பாம்பு இருப்பதாக மணல்மேடு தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது பாம்பு, அருகே இருந்த புளியமரத்தின் மீது ஏறி பொந்தில் பதுங்கியது. தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறி 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 6 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர். இதையடுத்து அது சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பு ஆற்றுப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.