அரசு பஸ் மோதி கோர்ட்டு ஊழியர் பலி
திருப்பூரில் நேற்று அரசு பஸ் மோதி கோர்ட்டு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர்
திருப்பூரில் நேற்று அரசு பஸ் மோதி கோர்ட்டு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோர்ட்டு ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவர் திருப்பூர் பூம்புகார் நகரில் தங்கியிருந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அதுபோல் மாவட்ட கோர்ட்டு ஊழியரான தாராபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார்(35) என்பவரும் திருப்பூரில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை வினோத்குமாரும், தினேஷ்குமாரும் விஜயமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அரசு பணியாளர்களுக்கு நடக்கும் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
பஸ் மோதி பலி
மோட்டார்சைக்கிளை தினேஷ்குமார் ஓட்ட, வினோத்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார். திருப்பூர் வளர்மதி நொய்யல் பாலம் அருகே சென்றபோது திருப்பூரில் இருந்து செங்கப்பள்ளிக்கு சென்ற அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி வினோத்குமார் பலத்த காயமடைந்தார். தினேஷ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். தினேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முற்றுகை
விபத்து நடந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் பஸ் டிரைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் அந்த பகுதியில் ே்பாக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பஸ் டிரைவர் யுவராஜிடம் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.