தி மு க கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
முதல்-அமைச்சர் பிரசாரம்
திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
இதற்காக 250-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைத்து வேட்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பகுதியில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்தபடி காணொலிகாட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
100 சதவீதம் வெற்றி கிடைக்கும்
முன்னதாக செய்தித்துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 440 வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 20 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஆவார்கள். நிச்சயமாக இத்தேர்தலில் இம்மாவட்ட மக்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை 100 சதவீதம் வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதி.
திருப்பூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, அதன்பிறகு மாவட்டமாக தரம் உயர்த்தியது தி.மு.க. ஆட்சியில் தான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு கலைக்கல்லூரி
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பின் தங்கியிருந்த அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதத்தில் அயராது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார். நம்பர்-1 முதல்-அமைச்சராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழகத்தை நம்பர்-1 மாநிலமாக சிறப்படைய செய்ய வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்ததற்கு நன்றி. தாராபுரத்தில் 50 ஆண்டு கனவான அரசு கலைக்கல்லூரி அமைக்கும் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுத்தீர்கள். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று அந்த வெற்றியை உங்களிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய, தெற்கு மாவட்டம்
மேலும் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), சுப்பராயன் (திருப்பூர்) ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் பனிரெண்டார் திருமண மண்டபத்தில் இருந்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராஜன் (தெற்கு), தினேஷ்குமார் (வடக்கு), மாநகராட்சியில் கூட்டணி வேட்பாளர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதுபோல் மடத்துக்குளத்தில் இருந்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
உடுமலை நகராட்சி பகுதியில் எம்.பி.நகர், ராமசாமி நகர் செல்லும் சாலைப்பகுதி, ஏரிப்பாளையம் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள ெரயிலடி திடல் ஆகிய 4 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசாரம் நேரடியாக காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.