பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்-கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாகன அனுமதி
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள், வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவற்றிற்கு காவல்துறையின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தின் அடிப்படையில் உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இதேபோல் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் தேர்தல் பிரசார வாகனங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் முன் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அனுமதி உரிமத்தை சம்பந்தப்பட்ட வாகனத்தின் முன்புற கண்ணாடி மீது நன்கு தெரியும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.
கண்காணிப்பு பணி
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிய கண்காணிப்பு பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.