குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
விழுப்புரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே தளவானூர் காலனி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 13). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் ராமகிருஷ்ணன் நேற்று மாலை 4.30 மணியளவில் அங்குள்ள தென்பெண்ணை ஆற்று பகுதிக்குச்சென்றான். அங்குள்ள அணைக்கட்டில் மண் அரிப்பை தடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் ஏறி நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கருங்கற்கள் சரிந்து விழுந்ததில் ராமகிருஷ்ணன் அங்குள்ள குட்டை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்தான். அவன்மீது கருங்கற்களும் விழுந்ததால் மீண்டு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானான். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.