அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. நெல் மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-02-12 16:13 GMT
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. நெல் மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

2-வது நாளாக மழை

தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலேடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 11-ந் தேதி இரவு திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் கனமழை விட்டு, விட்டு பரவலாக பெய்தது. 
இந்த கன மழையினால் அனைத்து பணிகளும் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. தார்ச்சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மழையின் தாக்கத்தினால் சாலையோர கடைகள் முற்றிலும் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டன. கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானம் இழந்தனர்.

சம்பா அறுவடை

திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். சம்பா சாகுபடியின் தொடக்கத்தில் மழை பெய்ததால் இளம் பயிர்கள் நீரில் முழ்கி பாதிக்கப்பட்டன. இதனால் கூடுதல் செலவு ஆனதுடன், உரங்கள் விலை அதிகரித்து உற்பத்தி செலவு அதிகமானது. 
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியது. தனியார் வாடகை எந்திரங்களின் கட்டண உயர்வு போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

நெற்பயிர்கள் சாய்ந்தன

ஆன்லைன் நெல் கொள்முதலில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டதால் அறுவடை செய்த நெல்லை உரிய காலத்தில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை முழு வீச்சில் நடைபெறும் நிலையில் 2 நாட்களாக பெய்த கனமழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 
வயலில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீடித்தால் தண்ணீரில் சாய்ந்து கிடக்கும் நெல் மணிகள் முளைக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

கூடுதல் செலவு

இதுகுறித்து காணூரை சேர்ந்த விவசாயி அழகர்ராஜா கூறுகையில், ‘குறுவை அறுவடை நேரத்தில் கனமழையினால் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடுகட்ட சம்பா சாகுபடியில் முழுமையாக ஈடுபட்டோம். இதில் சாகுபடி தொடக்கத்திலே வரலாறு காணாத கனமழையினால் இளம் பயிர்கள் நீரில் முழ்கி சேதம் அடைந்தது. இதில் மறுநடவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பயிரை காப்பாற்ற கூடுதல் செலவு செய்ய வேண்டியிருந்தது.
இந்த நிலையில் கடன் வாங்கி சாகுபடி செய்த பயிரின் மகசூல் கைக்கு கிடைக்கும் நேரத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கிறது. 

நிவாரணம்

இந்த மழை நீடித்தால் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள் முளைக்க தொடங்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் 750 ஏக்கர் சாகுபடி செய்யபட்ட நிலையில் 20 சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வயல்களில் தெளித்த உளுந்து, பயிறும் மழையினால் சேதமடைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார். 

மழை அளவு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கிறது.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 நேரத்தில் மன்னார்குடியில் அதிகபட்சமாக 68 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
நீடாமங்கலம்-63, பாண்டவையாறு தலைப்பு-62, திருவாரூர்-61, திருத்துறைப்பூண்டி-55, குடவாசல்-50, நன்னிலம்-47, வலங்கைமான்-33, முத்துப்பேட்டை-9.  

மேலும் செய்திகள்