முள்ளம் பன்றியை சமைக்க முயன்ற 2 பேர் கைது
ரோட்டில் அடிப்பட்டு இறந்து கிடந்த முள்ளம் பன்றியை சமைக்க கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ரோட்டில் அடிப்பட்டு இறந்து கிடந்த முள்ளம் பன்றியை சமைக்க கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
முள்ளம் பன்றி
பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரில் சிலர் முள்ளம் பன்றியின் இறைச்சியை வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் (பொறுப்பு) காசிலிங்கம் தலைமையில் வனவர்கள் பிரபாகரன், ஷெரீப் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில் ஆற்றுப்பாலம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் முள்ளம் பன்றி இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் மஞ்சநாயக்கனூரை சேர்ந்த மாசாணி (வயது 38), ஆறுச்சாமி (35), மகேந்திரன், குமார், சின்னவாடு ஆகிய 5 பேர் முள்ளம் பன்றியை தூக்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மஞ்சநாயக்கனூரில் வைத்து மாசாணி, ஆறுச்சாமி ஆகிய 2 பேரை பிடித்து ஆனைமலையில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். வனத்துறையினர் வருவதை அறிந்ததும் மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
வனத்துறையினர் பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆற்றுப்பாலம் பகுதியில் அடிப்பட்டு முள்ளம் பன்றி இறந்து கிடந்ததாகவும், அதை சமைப்பதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மாசாணி, ஆறுச்சாமி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து முள்ளம் பன்றியின் கறி 3 கிலோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், வனவிலங்குகள் ரோட்டில் இறந்து கிடந்தாலோ அல்லது அடிப்பட்டு கிடந்தாலோ உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதை தூக்கி செல்பவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.