சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-12 01:24 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த யாசர் அரபாத் (வயது 32) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் இருந்த உள்ளாடைகளை பிரித்து சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் ரகசிய அறை வைத்து அதன் உள்ளே தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக யாசர் அரபாத்தை கைது செய்த அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்