நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2022-02-11 22:03 GMT
சேலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
நகர்ப்புற தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
இதில், 3 பேரூராட்சிகளில் உள்ள 4 வார்டுகளில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 695 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  பேரூராட்சிகளில் உள்ள 532 வாக்குப்பதிவு மையங்களுக்கு 644 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 644 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 1,827 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1,840 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சின்னம் பொருத்தும் பணி
இந்தநிலையில், வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
இதேபோல், மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சி அலுவலகங்களிலும், 31 பேரூராட்சி அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடந்தது. 
அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உடனிருந்தனர். சின்னம் பொருத்தப்பட்ட நிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 18-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்