மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கொண்டு வந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
வாகன சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை சோதனையிட்டபோது, மதுபாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
விசாரணையில், அவர் காமராஜ் நகரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சர்க்கரை என்ற சக்கரவர்த்தி(வயது 51) என்பதும், அவர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 34 மதுபாட்டில்களையும், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.