மதுரை
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன், நெல்லை மாவட்டம், வள்ளியூர் வடக்கு பகுதியை சேர்ந்த முத்துராமன் உள்ளிட்ட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதிகளில் சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். சேவல் சண்டை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேவல் கால்களில் கூர்மையான எந்த ஒரு பொருளும் இல்லாமல் வெறும் கால்களில் சேவல் சண்டையானது நடத்தப்படும். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் சேவல்களுக்கு காயம் ஏற்படும்பட்சத்தில் சிகிச்சை அளிக்க விலங்கியல் டாக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளார். எனவே, சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு முழுவதும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சேவல் சண்டை தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் பட்டியலிட்டு மதுரை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.