நெல்லை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் பரிதாபமாக இறந்தார்
நெல்லை:
நெல்லை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவர்
நெல்லை ரெட்டியார்பட்டி அருகே உள்ள இட்டேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 19). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்து நேற்று இட்டேரி பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்றார். அங்கு குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
பரிதாப சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மாரிமுத்துவை பிணமாக மீட்டனர். அவர் குளத்தில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.