பள்ளிகொண்டா அருகே குடிமகன்களின் கூடாரமாக மாறிய பள்ளி கட்டிடம்
பள்ளிகொண்டா அருகே பள்ளி கட்டிடத்தில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பள்ளி செயல்படமுடியாமல் மூடப்பட்டுள்ளது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே பள்ளி கட்டிடத்தில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பள்ளி செயல்படமுடியாமல் மூடப்பட்டுள்ளது.
குடிமகன்களின் கூடாரமான பள்ளி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டாவை அடுத்த வேப்பங்காலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2 கட்டிடங்கள் உள்ளன. அதில் ஒரு கட்டிடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையும், மற்றொரு கட்டிடத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 76 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்று முதல் 3-ம் வகுப்புவரை உள்ள பள்ளி கட்டிட பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் குடித்துவிட்டு வகுப்பறை முன் படுத்துக்கொண்டு மாணவர்களை பள்ளி அறையை விட்டு வெளியேறும் படியும், ஆசிரியர்களை கிண்டல் செய்வதும் வருகின்றனர்.
பள்ளி மூடல்
இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் அந்த கட்டிடத்தில் பாடம் நடத்த முடியாமல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வகுப்பறை கட்டிடத்தின் முன் பகுதியில் 1,2,3 ஆகிய வகுப்பில் படிக்கும் மாணவ- மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தி வந்தனர்.
குடித்து விட்டு பள்ளி செயல்படாத வகையில் ரகளையில் ஈடுபடுபவர்களை ஊர் பொதுமக்கள் யாரும் தட்டிக்கேட்டால் அவர்களை வன்மையாக பேசி வருகின்றனர். ஆகவே இந்த பள்ளி கடந்த 10 நாட்களாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுப்பட்டுவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.