திருச்சியில் விட்டு, விட்டு பெய்த சாரல் மழை

திருச்சியில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது.

Update: 2022-02-11 18:39 GMT
திருச்சி, பிப்.12-
திருச்சியில் சாரல் மழை விட்டு, விட்டு  பெய்தது.
பனித்துளிபோல பெய்த மழை
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக சில நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பின், திருச்சி கோரையாறு, அரியாறு ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூரில் கோரையாற்றின் கரையோர வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதுபோல அரியாற்றின் வெள்ளப்பெருக்கால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி, திருச்சி வயலூர் சாலையில் உள்ள பெஸ்கி நகர், செல்வம் நகர், சண்முகாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்தது.
2 மாத இடவெளியில் நேற்று திருச்சியில் வெயிலே தெரியாத வகையில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. ஒரு பக்கம் மழையால் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபுறம் சற்று பாதிப்படைந்து மக்கள் அவதியடையவும் செய்தனர்.
திருச்சி மாநகரில் காலை 9.30 மணிக்கு பனித்துளிபோல தொடங்கிய மழை சாரல் தொடர்ச்சியாக மாலை வரை நீடித்தது.
பள்ளி மாணவர்கள் அவதி
இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சைக்கிளில் சென்ற மாணவ, மாணவிகள் பெரும்பாலானவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர்.
மேலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் மழையால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் வியாபாரமும் மந்தமாக இருந்தது. சாலை பல இடங்களில் சேறும் சகதியுமாக மாறியது.
திருச்சி கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், ஆழ்வார்தோப்பு, உறையூர், பீமநகர், மலைக்கோட்டை, தில்லைநகர், கே.கே.நகர். எடமலைப்பட்டி புதூர், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்